நெத்தியடி !


மாசற்ற காற்றுப் பாற்றாக்குறையைப்போல 
மாசில்லா அன்பும் இன்று பற்றாக்குறைதான்.
இறையன்பும், தேவ அன்பும் பெயரிலே தான் இருக்கிறது,

புகைப்படச்சான்று: EMS World.com

எதிர்பாலர்மேல் வருவதே அன்பு என்று இலக்கணமான இன்று,
எதிர்பார்ப்பில்லாமல் வருவதே அன்பு என்று இலக்கணம் வகுத்தவர் 
எம்பெருமான் இயேசு கிறிஸ்து ஒருவரே.

அவர் வாழ்ந்த காலத்தில், 
மக்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கும்போது 
விபச்சாரப் பெண் ஒருத்தியை 
கையும், மெய்யுமாகப் பிடித்து விட்டோம் எனத்
தண்டிக்கச் சொல்லி தாண்டவம் ஆடினர் ஒரு கூட்டமக்கள். 

தாம் மாட்டிக்கொண்டால் வக்கீலாவதும், 
பிறர் மாட்டிக்கொண்டால் நீதிபதியாவதும் இயல்புதானே !
இன்றுமட்டுமல்ல, அன்றும் இதே தான் நிலை.

உத்தம புத்திரராகவும், ஒழுக்க சீலர்களாகவும் 
வேஷம்போட்ட மாயக்கூட்டம் கோஷம்போட்டது.
கல்லெறிஞ்சு சாகடிக்க கூட்டம்கூடி கும்மரிச்சம் போட்டது.

புகைப்படச்சான்று: ArcheryGermany.co.uk


கருணைக்கடவுளோ, தரையில் குனிந்து விரலால் எழுதினார்.

அவர்களோ, ஓயாத கடல் அலையாய் இரைச்சலிட்டுக் 
கொடூரமாகக் கொல்லச்சொல்லி கூச்சலிட்டனர்.

நிமிர்ந்து பார்த்த இயேசுபிரான்
நின்ற மக்களைப்பார்த்து,
"உங்களில் தப்பில்லாத உத்தமன் முதல் கல்லை 
இவள் மேல் எறியுங்கள்" என்றார்.

புகைப்படச்சான்று: The Sports Rush

சுத்திவளைச்சு பேசாமல் 
சுத்தியல் வச்சு நெத்தியில் அடிச்ச மாதிரி 
ஒரே அடி, நெத்தி அடி.

ஒரே ஒரு கல்லுதான், அதுவும் பாறாங்கல்லு!

அவங்ககிட்ட சொன்னது கடவுளாச்சே,
அவங்க சொந்த மனசும் குத்திருச்சே!

ஒரே ஒரு கல்லாய், தாவீது அடித்த கூழாங்கல்லாய். . .
கொலைவெறி பிடித்த அந்த கோலியாத்துகள் 
சிட்டாய்ப் பறந்தனர், சட்டெனக் கலைந்தனர்!

இரண்டாம் முறை நிமிர்ந்து பார்த்த இயேசு நாதர்,

பெண்ணே, "உன்னைக் கொல்ல வந்த ஒருத்தனுமில்லையோ?" எனக் கேட்க,
அவளோ, "இல்லை ஆண்டவரே" என்றாள்.

இரக்கக் கடல், கிருபைக் களஞ்சியம்,
கருணை மூர்த்தி இயேசு கிறிஸ்து 
நம்மை நியாயம் தீர்க்க அல்ல,
மீட்க வந்த இரட்சகர் அல்லவா,
எனவே, கருணையோடு சொன்னார்,

நானும் உன்னை நியாயம் தீர்ப்பதில்லை!
"நீ போ, இனி பாவம் செய்யதே என்றார்!"

புகைப்படச்சான்று : Mind 4 Survival.com

அவளை, நிந்தனை செய்து தீர்ப்பிடவில்லை.
மாறாக, சிந்தனை செய்ய நெஞ்சுருகப் பேசினார்.

அந்த தரமான வார்த்தைகளே, 
தண்டனையை விட தாக்கத்தை ஏற்படுத்தியது.

சாவுக்கு அஞ்சி அதன் விளிம்பில் நின்றவளை 
வாழ்வுக்குத் திருப்பினார் இயேசு இரட்சகர்.

அன்று தீர்ப்பிடாதவர், என்றும் தீர்ப்பிடுவதில்லையா?
இது தான் தப்பு கணக்கு. . . 

புகைப்படச்சான்று: Meme Center

விபச்சாரப் பெண்ணை மன்னித்து மறுவாழ்வு கொடுத்த இறைவன் 
நாம் எந்நிலையில் இருந்தாலும் நம்மையும் 
மன்னித்து ஏற்கத் தயாராக உள்ளார்.

ஆனால்,அன்று அவர் இரட்சகராக வந்தார்;
மீண்டும் அவர் நீதிஅரசராக வருவார்.

"நெத்தியடி"யாக அவர் நமக்கு உரைப்பது 
"நீ போ இனி பாவம் செய்யாதே" என்பதே!

புகைப்படச்சான்று: iStockPhoto.Com


("நெத்தியடி!" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த வரிகள், 'ஆர்வமிக்க அன்பர்களின் ஐக்கியம்' மூலம் நடத்தப்படும் குறுநேர மெய்நிகர் வாராந்திர கூடுகைக்காக எழுதப்பட்டு, 29.09.2020ல் அக்கூடுகையில் வாசிக்கப்பட்டது. யாவரையும் ஊக்கப்படுத்துவதற்காக 'ஆர்வமிக்க அன்பர்களின் ஐக்கியம்' எடுக்கும் இந்த முயற்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.)

Comments

  1. நெத்தியடி படைப்பு. சிறப்பானதொரு நெத்தியடி !

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவருடைய பெயர் மகிமைப்படட்டும்.
      இறையாசீர் உங்களை தொடர்ந்து நடத்துவதாக!

      Delete
  2. Replies
    1. இறையாசீர் உரித்தாகுக!

      Delete
  3. மிக அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் மாப்ள

    ReplyDelete
    Replies

    1. வாழ்த்துக்களுக்கு வந்தனங்கள் மாப்ள !
      இறையாசீர் உங்களை தொடர்ந்து நடத்துவதாக.

      Delete
  4. சுத்தியலாள சத்தமா நெத்தியில அடிச்சாதான் நெத்தியடியா என்ன
    சத்தியத்தால சத்தமின்றி சரியா அடிச்சா அதல்லவோ நெத்தியடி

    அன்று ஆண்டவர் இயேசு பிரான் அவ்விதம் செய்ததை
    இன்று எம் கண் முன்னால் அப்படியே கொண்டு வந்தீரே

    மாய்மாலம் செய்வோர் தலையில் விழுந்த இவ்விடி
    வாய்மையே வெல்லும் என உரைக்கும் நெத்தியடி

    நெத்தியடி அண்ணே! இது ஒரு நெத்தியடி!
    சத்தியத்திற்கு சான்று பகரும் நெத்தியடி!!

    சத்தமின்றி இவ்வெழுத்துப் பணி தொடரட்டும்!
    நித்திய ராஜனின் ஆசீர் உங்களில் பெறுகட்டும்!

    இறையாட்சி விரைவில் மலரட்டும்!
    இறையாசீர் எல்லோருக்கும் கிட்டட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. உங்களது வார்த்தைகள் உள்ளங்கை நெல்லிக்கனியாய் இருக்கிறது!
      இறைவன் தாமே உங்களை தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக!!
      இறையாசீர் தாமே உங்களை தொடர்ந்து நடத்துவதாக!!!

      Delete
  5. அருமையான நெத்தியடி

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவருடைய பெயர் மகிமைப்படட்டும்.
      இறையாசீர் உங்களை தொடர்ந்து நடத்துவதாக!

      Delete
  6. கையும் களவுமாக பிடிக்கப்பட்டவளோ அல்லது பிடித்து வந்த கூட்டமோ.. இரண்டிலும் என்னை உருவகப்படுத்தி பார்க்கிறேன்... இனி பாவம் செய்யாதே என மகத்துவ மன்னிப்பு இதை வாசிக்கும் என்னைப்போன்ற பாவிகளுக்கு இருதயத்தில் நெத்தியடியாய் படிய விரும்புகிறேன்.. சிந்தனைக்கு நன்றி �� வரிகளுக்குள் நெறிகளை வகுத்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களது மேலான சிந்தனை உத்வேகம் கொடுக்கிறது !
      இறையாசீர் உங்களை நடத்தட்டும் !!
      இறையொளி உங்கள் மூலம் பரவட்டும் !!!

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED