கொளுத்தும் வெயிலும், கோரப்பசியும் மோதி விளையாடியதில்
பந்தாவும், பரிதாபமுமாய் கேண்டினுள் நுழைந்தார்கள் தேவாவும் ராசாவும். அங்கோ, சீனிவாசனும்,
குணாவும் இவர்களின் வரவுக்காக வாடிநிற்க, நடந்தது சங்கமம்; நிகழ்ந்தது தீர்மானம். ஆளுக்கொரு
குஸ்காவும் அவிச்ச முட்டையுமாய் டோக்கனை வாங்கி, கவுண்டரில் கொடுத்தான் தேவா. காத்திருந்த
இந்த நால்வர் அணியின் கைக்கு சாப்பாடு வருமுன், அந்த ஆவி (Aroma) பறந்து அவர்களை ஆசுவாசப்படுத்தியது.
சாப்பாடு கைக்குவர, காலியான டேபிள் கண்ணில்பட பரிதாபம் குறைந்தது, பரவசம் துளிர்த்தது.
குஸ்கா உள்ளே போகப்போக வார்த்தைகள் குற்றால அருவியாய்
துள்ளிக்குதித்துக் கொட்டியது. பேச்சும் சிரிப்பும்
களைகட்ட அங்க புதுசா ஒரு தலைதட்டியது. கையில் டீ கிளாஸுடன் அழையா விருந்தாளியாய்
Entry கொடுத்தார் தமிழ் ஆசிரியர் டார்வின். இவரு தான் இந்த பசங்க வகுப்புக்கு ஆஸ்தான
தமிழ் ஐயா. பசங்க அவரப் பாத்ததும் இன்னும் கொஞ்சம் குஷியாகிட்டாங்க. ஏன்னா, இந்த டார்வின்
சார் எப்பவுமே பசங்களோட நலம் விரும்பி, தன்னை எப்பவுமே ட்ரெண்டிங்ல அப்டேட்டா வச்சிருக்கிறதால
பசங்களும் இவருகிட்ட டக்குனு ஒட்டிக்குவாங்க.
"ஏய்யா, ராசாக்களா. . உங்க சவுண்டு தான் வாசல் வரைக்கும் கேக்குது"
என முடிக்குமுன், "அவ்வளவு சத்தமாவா கேக்குது. . . .?" என தேவா ராகம்போட,
குழுவோ சிரிப்பால் கோரஸ் போட்டது. சின்ன இடைவெளி விட்ட தமிழ் ஐயா, "என்ன சீனி,
பொதுவா சாப்பிட்றத எல்லாம் வீடியோ எடுத்து ரீல்ஸ்
போடுவியே . . . 'கருப்பு சட்டையும், குஸ்கா முட்டையும்'ன்னு இதையும் தட்டி வுடு" என முடிக்குமுன்னே,
"ப்ப்பா... செம்ம சார்" என உருகினான் குணா. "அட போங்க சார். . .நான்
இன்ஸ்டால போஸ்ட் போட்டா எவனும் லைக் பண்ண மாட்டேங்குறான்" என அலுத்துக்கொண்ட சீனி,
"ராசாவ சொல்லுங்க, அவனுக்கு Fan Base ஜாஸ்தி. எத போட்டாலும் லைக்ஸ் அள்ளும். எனக்கு
தெரிஞ்சு எப்பவுமே செழிப்பா இருக்குறது அவன் மட்டும் தான் சார்" என வலைவிரித்தான்.
"சார், அதுல பாதி பொண்ணுங்க யாருனே தெரியாது,
அது எல்லாம் டைம் பாஸ் சார். இதுல கொடுமை என்னன்னா எல்லா பொண்ணுங்களுக்கும் Boy
Friends, Boy Bestie னு இருக்காங்க. நான் சும்மா பேசுவேன் அவ்ளோ தான் சார். பொதுவா
இதுல பாதி Fake Id யாத்தான் இருக்கும் சார், இவனுங்களும் அப்டித்தான். சார், ஒரு உண்மைய
சொல்லட்டுமா? எங்களை விட உங்களுக்குத்தான் சார் மாஸ் அதிகம்" என அவரையும் வம்பிழுக்க
ஆளாளுக்கு கலாய்த்து சிரித்தார்கள்.
யதார்த்தமாக ஆரம்பித்தார் டார்வின் சார், "தம்பிகளா,
தெரியாத பொண்ணுங்ககிட்டயெல்லாம் பேசாதீங்க. சில பொண்ணுங்க நைசா பேசி Slice பண்ணிருவாங்கடா.
அதாவது, குளுரகுளுர பேசி உங்களையே கூறுபோட்ருவாங்க. ஆரம்பத்துல பாசமா பேச ஆரம்பிப்பாங்க.
. .அந்த பாசம் அதிக பாசமாகி, ஆபாசத்துல தான் போய் முடியும். இன்னும் சில குரூப்பு இருக்காங்கடா,
இதுல பணம் பறிக்கிறதையே வேலையா வச்சிருக்காங்க. இத Honey Trap ன்னு சொல்லிட்டு திரியுவாங்க.
அதுக்காக நம்ம பையன்களும் அப்பிராணிக கிடையாது, சில பையனுங்களும் பொண்ணுங்களை Trap
பண்ணுறாங்க. இந்தமாதிரி கும்பலே யாரை ஏமாத்தலாமுன்னு தான் சுத்திட்டு திரியுறானுங்க.
இந்தமாதிரி தில்லுமுல்லு கூட்டத்திட்டயெல்லாம் சிக்கிராதீங்கடா! மொத்தத்துல, தெரியாத ஆளுங்ககிட்ட பேசாதீங்க, தேவையில்லாத
வேலைய செய்யாதீங்க. மனசாட்சி தப்புன்னு சொன்னா தயவுசெஞ்சு செய்யாதீங்க, மாட்டிக்கிவீங்க.
அப்புறம் நான் ஊர்லயே எடுத்துக்காட்டா வாழ விரும்புனேன்; ஆனா, என்ன ஊருக்கே எடுத்துக்காட்டிடாங்கன்னு
பொலம்பாதீங்க!!"
அமைதியாக ஆணியறைந்த டார்வின் சார், சிணுங்கிய
செல்போனை காதில்வைத்து, இவர்களிடம் கையசைத்து நகர்ந்தார். நால்வரின் கைகளும் காய்ந்து
கொண்டிருக்க, இதயமும் - ஈரல் குலையும் சற்று நின்று இயங்கியது. நிதானமான நாலுபேரும்
Wrong நண்(ம்)பர்களையும், முகமறியா Friend Requestகளையும், தேவை இல்லாத Fake
Accountகளையும் Delete செய்யத் தொடங்கினார்கள்.
சரி, கட் அவுட் தான் முடியல, ஒரு கதையாச்சும் எழுதலாம்னு யோசிச்சேன். அப்படி எழுதுனது தான் இந்த காலேஜ் கேண்டீன்.
BYM- SFJ - மாணவமலர் 98வது இதழில் இந்த கதை பிரசுரமானது.


ஐயா காலேஜ் கேன்டீன் மிக சிறப்பு!
ReplyDeleteநால்வரைப் பற்றி படிக்க ஒரே பரபரப்பு!!
மனமார்ந்த வாழ்த்துகள்!
தொடரட்டும் எழுத்துகள்!!